கர்மாவின் கணக்கு

சில கதைகள் படித்த பின்பும் வெகு நேரம் நம் சிந்தனையை ஆட்கொண்டு பல்வேறு நினைவுகளைத் தூண்டி விட்டுவிடுவதைப் போல, சமீபத்தில் ஜெமோ எழுதிய காசும் பிறப்பும் சிறுகதையைப் படித்து விட்டு அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்ததால், இந்த பதிவு.

சில வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நானும் மனைவியும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது  அங்கு அதிகம் கூட்டம் இருக்கவில்லை. சொல்லப்போனால் நாங்கள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தோம்.  அப்போது அங்கே ஒரு பெரியவர்  – கிட்டத்தட்ட 70களில் இருக்கலாம்.  பார்ப்பதற்கு நல்ல வெள்ளை நிறத்தில், தேஜஸ் உடன், அரசாங்க அல்லது பேங்க் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர் போல இருந்தார்.  போத்தியாக இருக்கக்கூடும் என்று  நான் கணித்தேன், ஆனால் அவர்  கோயிலில் வேலை செய்பவர் அல்ல.  அவர் நடை உடை பாவனைகளிலிருந்து அவர் உள்ளூர்க்காரராக இருக்க வாய்ப்பில்லை என்றே மனம் சொல்லியது.  அவராகவே எங்களை நோக்கி வந்து கோவிலைப் பற்றி எங்களுக்கு விளக்க ஆரம்பித்தார். கோயில் ஸ்தல புராணம், கோயில் கட்டப்பட்ட விதம், திருவட்டாரு வரலாறு,  திருவட்டார் கோவிலுக்கும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கும் உள்ள  தொடர்பு என்று எக்கச்சக்கமாக தகவல்களை எங்களுக்கு சொல்லிக் கொண்டே வந்தார். நம்மாழ்வாருக்கும் அந்த கோயிலுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறி திருப்பாவையிலிருந்து ஒரு பாடலையும்  அருமையாக பாடினார். நான் ஓரளவு திருவட்டார் பற்றி அறிந்திருந்தேன் ஆனால் அவர் கூறிய தகவல்கள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுப்பதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கைடு செய்ய வேண்டிய வேலையை அந்த பெரியவர்  தன்னார்வத்தோடு செய்து கொண்டிருந்தார். கோவிலை சுற்றி முடித்து வரும் போது என் மனைவி என்னிடம் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று  மெதுவாக ஆங்கிலத்தில் என்னிடம்  கூற,  எனக்கு சற்று தயக்கம். அப்பெரியவரைப் பார்க்க அவர் எதுவும் வாங்குபவர் போல தெரியவில்லை. மேலும் கேரள கோயில்களில் பொதுவாக தட்சிணையை எதிர்பார்ப்பதில்லை என்பதாலும்,  அவருக்கு ஏதாவது கொடுத்து அவரை அவமதித்துவிடக்கூடாது என்று எனக்கு பயம்.  ஆனாலும் மனைவி  அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்பியதால் சரி என்று ஒப்புக் கொண்டேன்.  என் மனைவியும் 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்ட,  அவர் அதை சற்றும்  எதிர்பார்க்காதவர் போல  திடுக்கிட்டு  எங்களைப் பார்த்த அந்த நொடியிலே  எனக்கு புரிந்து விட்டது அவர் அதை ஒரு இன்சல்ட் ஆக எடுத்துக் கொண்டார் என்று. நான் உடனே அவரிடம் சாரி என்று மன்னிப்பு கூற, அதுவரை இருந்த இனிமை அவர் முகத்திலிருந்து விலகி, ஒருவித கோபத் தொனியில் அவர் எங்களிடம் ‘எனக்கு வேண்டுமானதை ஆதிகேசவன் எனக்கு கொடுத்திருக்கிறான். நீங்கள் ஏதாவது கொடுக்க விரும்பினால் கோயிலுக்கு கொடுங்கள்’ என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டார். எங்கள் இருவருக்கும் மிகுந்த மன வருத்தமாகிவிட்டது.  அவ்வளவு நேரம் கோவில் பற்றி அவரின் மூலமாக எத்தனையோ விஷயங்களை தெரிந்து கொண்டோம் ஆனால் கடைசியில் அவரை புண்படுத்தி விட்டோமே என்று  வருந்தினோம். திரும்பி வரும்போது யோசித்துக் கொண்டே வந்தேன் அந்த வயதில் அத்தனை ஒரு தன்னார்வத்தோடு, எந்த பிரதிபலனும் எதிர்பாராது, அவர் அந்த வேலையை எடுத்து செய்யக் காரணம் என்ன. தன்மீட்சி போல அவருக்கும் ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா இல்லை நம் சிறு மனம்தான் எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம் தேடுகிறதா என்று. 

காசும் பிறப்பும் கதையைப் படித்தவுடன் இந்த சம்பவம் ஏனோ ஞாபகம் வந்தது. சுப்பையருடன் புதையலைக் கண்ட கதைசொல்லியால் எப்படி தனக்கென யோசிக்காமல், ஆனைத்தலைப்பிள்ளை செய்த பாவங்களுக்கு தான் செய்யும் பரிகாரமாக இருக்கட்டும் என்று எண்ணி புதையலை மூடி வைத்தாரா அல்லது கோவில் சொத்து குல நாசம் என்பதால், வரும் தலைமுறைக்கு பாவத்தைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று புதையலை மூடி வைத்தாரா என பல கேள்விகள்.

ஷாகுல் ஹமீதுடன்(கப்பல்காரன்) ஒரு சந்திப்பு

இன்று ஒரு இனிய சந்திப்பு- எங்களூர்க்காரரும், கப்பல்காரன் வலைப்பக்கத்தை நடத்தி வருபவருமான ஷாகுல் ஹமீது அவர்களை டாலஸில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஜெமோ தளத்தில் ஷாகுல் அவர்களின் கடிதங்களை வாசித்து இருந்த போதும், அவரை என்றாவது ஒரு நாள் நான் நேரில் சந்திக்க நேரும் என்று நினைத்திருக்கவேயில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் செந்தில்,  ஷாகுல் அவர்கள் டாலஸ் வருகிறார் என்று சொன்ன போது, உடனே அவரை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதை  தெரிவித்தேன். நாகர்கோவில்காரர் என்பதும், கப்பலில் வேலை பார்ப்பவர் என்பதும், கல்லுரி நாட்களில் கப்பலில் சேர வேண்டும் என்று எனக்கு பெரும் கனவு இருந்ததும் அவர் மீது  மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. 

தற்கால தமிழில் ஷாகுல் அளவிற்கு கப்பல் வாழ்க்கையை வேறு யாரும் பதிவு செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரின் கப்பல்காரனின் டைரிக் குறிப்புகள், தமிழில் ஒரு தொழில் சார்ந்த அனுபவ தொகுப்புகளில் முக்கியமான ஒன்று. விரைவில் அவர் அதை புத்தக வடிவில் வெளியிட வாழ்த்துக்கள். அவருடைய ஈராக் போர்முனை அனுபவங்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.

ஒரு சிலரிடம் பேசும்போது நம்மை அறியாமலேயே மிக அனுக்கமாக உணர்வோம். ஷாகுல் ஹமீது அவர்களும் அப்படிப்பட்டவர். முதல் முறை சந்திக்கிறோம் என்பது போல இல்லாமல் வெகு நாள் பழகிய நண்பர்களை போல மிக இயல்பாக, நட்பாக பேசினார். கப்பல் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளும் போது அவர் கண்களில் தெரியும் ஆர்வம் எதிரில் இருப்பவர்களையும் தாமாகப் பற்றிக் கொள்ளும். 

அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவரின் சொந்த ஊருக்கு வெகு அருகில் தான் என் தந்தை வழி பூர்வீகம் என்று அறிய முடிந்தது. உலகம் எத்தனைச் சிறியது! அவரும் ஜெயும் லக்ஷ்மி மணிவண்ணனும் வாக்கிங் சென்றதாக அவர் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் பள்ளி கோடை  விடுமுறை நாட்களில் நாங்கள் சுற்றித் திரிந்த இடங்கள். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், அவரும் வெளியூர் செல்லும்போது நாகர்கோவில் ராமலக்ஷ்மி ஸ்வீட் ஸ்டாலில் நேந்திரம் சிப்ஸ் வாங்கிக் கொண்டு செல்வார் என்பது. பெங்களூரில் பணிபுரிந்த நாட்களில் ஒவ்வொரு முறை விடுமுறை முடிந்து செல்லும் போதும், டீமில் எல்லோருக்கும் அந்த சிப்ஸ் வாங்கிக் கொண்டு செல்லும் அந்த நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த சிப்ஸை ருசிக்க வாய்ப்பு அளித்த ஷாஹுலுக்கும், செந்திலுக்கும் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொண்டேன். 

கப்பல் வாழ்க்கையில் சுயஒழுக்கமும், சுயக் கட்டுப்பாடும் எத்தனை முக்கியம் என அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கியது என்றும் நினைவில் இருக்கும்.

நாட்டில் இருக்கும் நாட்களில் அவர் தன்னார்வலராக செய்யும் பணிகள், பயணங்கள், அவரின் ஈராக் அனுபங்கள், அவர் சந்தித்த ஆளுமைகள் என அவரிடம் பேச,  அவரிடமிருந்து தெரிந்து கொள்ள என்று எத்தனையோ விஷயங்கள். ஒரு மணி நேரம் தேநீர்ச் சந்திப்பு என்று திட்டமிட்டது, இரண்டு மணி நேரம் தாண்டி சென்றதே தெரியவில்லை! 

இன்ஜினியரிங் முடித்து விட்டு எப்படியாவது கப்பலில் சேர்ந்து விடவேண்டும் என்று தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்த அந்த நாட்களில் ஷாகுல்  போல ஓருவர் வழி காட்டி இருந்தால், ஓருவேளை எனது வாழ்க்கைப் பயணமே வேறு பாதையில் சென்றிருக்கும். 

அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதேதோ பழைய நினைவுகள் – மும்பை நாட்கள், கேட் வே ஆஃப் இந்தியாவில் அமர்ந்து, தூரத்தில் அரபிக்கடலில் தெரியும் கப்பல்களை ஏக்கத்துடனும், என்றாவது ஒரு நாள் அக்கப்பல்களில் தானும் பணி செய்வோம் என கண்களில் கனவுகளுடனும்  பார்த்துக் கொண்டு இருந்த அந்த இளைஞனை மீண்டும் நினைவுகளின் இருட்டறைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது போல இருந்தது.

பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர் செந்தில் சொன்னது போல, நாம் எதையோ  எதிர்பார்த்துக் கொண்டு இருக்கம் போது, வாழக்கை வேறு எதையோ கொடுக்கிறது. அந்த நேரத்தில் அதன் அர்த்தம் புரியாமல் நாம் தடுமாறலாம்,  ஆனால் பின்னோக்கிப் பார்க்கும் போது, எல்லாம் ஏதோ காரணகாரியமாகவே நடக்கிறது என்று புரிந்து கொள்வோம். ” You can only connect the dots backwards” என்பது மனதில் மின்னி்ச் சென்றது.

கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு,  இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த சிறு நகரத்து இளைஞனுக்கு கப்பல் வேலையை விட கம்பியூட்டர் வேலையே சரியானது என்று இறையே அன்று வழி மாற்றியதாகவே தோன்றுகிறது.

என்னுடைய மிக குறிய கப்பல் அனுபவங்களைப் பற்றி தனியே ஒரு பதிவு இட வேண்டும். 

அன்பே சிவம்

சமீபத்தில் ஒரு அவசர வேலையாக, கடை மூடப்போகும் கடைசி நேரத்தில் காஸ்ட்கோவிற்கு செல்ல வேண்டியிருந்தது.அவசரமாக வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு, செக்-அவுட் கவுண்டரில் வரிசையில் நின்றேன். என் முன்னால் நின்றிருந்த ஒருவரின் கார்ட்(cart) முழுக்க நிரம்பியிருந்தது. கவுண்டரில் இருந்தவர் வயதான கேஷியர்; நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்து சோர்வடைந்திருந்தார். மேலும், அவரின் ஷிப்ட்  முடியும் நேரம் என்பதால் முகத்தில் அந்த சோர்வு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வரிசையில் நின்றிருந்த அந்த நபருக்கு, கொஞ்சமாவதுஉதவலாமே, சிலபொருளையாவதுஎடுத்து வைக்கலாமே என்ற சிந்தனை கூட வரவில்லை. எல்லாவற்றையும் அந்த வயதான கேஷியர் தனியாகச் செய்யட்டும் என்கிற மாதிரி அப்படியே சும்மா பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஒரு சிறிய உதவியைக் கூட செய்ய விருப்பமில்லாத இந்த மனிதர், வீட்டில் எப்படிப்பட்டவராக இருப்பார்? தன் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாரிடம் எவ்வளவு சுமையை போட்டிருப்பார்? இப்படிப் பொது இடத்தில் கூட சுயநலம் காட்டுகிறவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கருணையற்றவராக இருக்கக் கூடும்?

சில நேரங்களில் இப்படிப்பட்ட சாதாரணமான தருணங்களில்தான் ஒருவரின் உண்மையான மனிதநேயம் அல்லது சுயநலம் தெளிவாக வெளிப்படுகிறது. நல்லவேளையாக என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலும் கருணையாளர்களையே சந்தித்து இருக்கிறேன்.

நான் முதல் முறை அமெரிக்கா வந்தபோது மில்வாக்கி என்ற ஊரில் நடந்த சம்பவம். வந்த இரண்டாவது நாளில், போன் சார்ஜர் பழுதாகிப் போகவே, வேறு சார்ஜர் வாங்க பக்கத்தில் இருந்த ரேடியோஷாக் கடைக்கு அறை நண்பனுடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க, ரேடியோஷாக் மிகப் பிரபலம்.   கடைக்கு வெளியே, ஒரு முதிய வெள்ளையர் ஏதோ உபகரணங்களை மாட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் கடையில் இருந்து வெளியே வந்த போது தான் தெரிந்தது அது டெலஸ்கோப் என்று. ஆர்வமுடன் நாங்கள் பார்ப்பதை கவனித்த அவர், ‘நிலவைப் பக்கத்தில் பார்த்திருக்கிறீர்களா? வந்து பாருங்கள்’ என்றழைக்கவே, முதல் முறையாக டெலஸ்கோப் மூலமாக நிலவைப் பார்த்து வாயடைத்துப் போனேன். நிலவின் மலைப் பரப்புகள், க்ரேட்டர்ஸ் என இதுவரை கண்டிராத நிலவை அன்று பெயர் கூடத் தெரியாத அந்த அமெரிக்கர் காட்டினார். இப்போது யோசித்துப் பார்க்கும் போது, முற்றிலும் அந்நியர்களாகிய எங்களை அன்று அவருடைய விலை உயர்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்து அழைத்தது அவரின் பெருந்தன்மையும், சக மனிதர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அல்லவா. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் கூட அந்த பெயர் தெரியாத அந்த முதிய அமெரிக்கரின் முகமும் அந்த சம்பவமும் நினைவில் இருக்கிறது. (அதன் பின்னே டெலஸ்கோப் பித்துப் பிடித்து, இந்தியா திரும்பும் போது நானும் ஒரு டெலஸ்கோப் வாங்கிக் கொண்டு போனது தனிக்கதை.) 

திருமணமான சில மாதங்களில் நாங்கள் சிகாகோவில் இருந்தோம். அப்போது குறுகிய கால ப்ராஜக்ட் என்பதால், எப்போது வேண்டுமானலும் திருப்பி அனுப்பப்படலாம் என்றிருந்ததால், முடிந்தவரை அமெரிக்காவை சுற்றிப் பார்க்கலாம் என்று அக்டோபர் மாதத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியைக் காணச் சென்றிருந்தோம். அது ஆஃப் சீசன் என்றோ, அந்த நேரத்தில்  நயாகராவில் கிட்டத்தட்ட எல்லாமே மூடப்பட்டிருக்கும் என்றோ எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மதிய உணவிற்காக, கூகுளில் தேடிப் பார்த்த போது, பக்கத்திலேயே ஒரு பஞ்சாபி ஹோட்டலைக் காண்பிக்க, நாங்களும் உள்ளே சென்று விட்டோம். உள்ளே நுழைந்த பின்தான் தெரிந்தது, ஆஃப் சீசன் என்பதால் அந்த ஹோட்டல் அப்போது தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதிய உணவு நேரத்தில் சென்றதால், அந்த ஹோட்டலின் ஒரு பகுதியிலேயே குடியிருந்த அந்த ஹோட்டலின் உரிமையாளர் குடும்பத்தினர் அவர்களுக்காக சமைத்திருந்த உணவை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாததது. அதன் பின்பு பஞ்சாபிகள் மீதான என் மதிப்பு பல மடங்கு கூடிப் போனது. “பகிர்ந்து உண்டு உண்” என்பதற்கு ஈடான பதம் பஞ்சாபியில் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் அன்று அவர்கள் செய்தது அதைத்தானே! முன்பின் தெரியாதவர்களிடம் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் எத்தனை கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

கோர்டன் ஹென்றியை நாங்கள் சந்திக்கும் போது அவருக்கு வயது 70களில் இருந்திருக்கலாம். கைத்தடியுடன் தான் வாக்கிங் வருவார். ஆனால் கைத்தடி நடப்பதற்காக அல்ல, பாம்பு போன்ற ஜந்துகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று புன்னகையோடு சமாளிப்பார். அப்போது நாங்கள் ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்தோம். மாலை நேரங்களில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் அங்கு வாக்கிங் செல்பவர்கள் குறைவு. அதுவும் வார நாட்களில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே ஆட்கள் இருப்பார்கள். அப்படி ஒரு வார நாளில் ட்ரினிட்டி ஆற்றோரமாக வாக்கிங்  செல்லும் போது தான் கோர்டன் ஹென்றியை சந்தித்தோம். தன் கைத்தடியை மோனோபோட் போலப் பயன்படுத்தி அன்று அவர் ஒரு பறவையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். போட்டோகிராஃபி மற்றும் பறவைப் பார்த்தல் இரண்டிலும் ஆர்வம் இருந்ததால் அவர் ஃபோட்டோ எடுத்த பறவையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்தவர் போல அவர் முன்னகர்ந்து அவர் எடுத்த அந்த பறவையின் புகைப்படத்தை  சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடு எங்களிடம் காண்பித்தார். சில மனிதர்களைப் பார்த்த உடனேயே சினேகப்பூர்வமாக உணர்வோமே, அப்படிப்பட்டவர் கோர்டன். அன்று ஆரம்பித்த அவருடைய நட்பு ஃபோர்ட் வொர்த் நகரத்திலிருந்து வேறு நகரத்திற்கு மாறிச் சென்ற பின்பும் தொடர்ந்தது. கேமரா பற்றி, பறவைகள் பற்றி, எப்படி அந்த வயதிலும் தளராமல் தினமும் வாக்கிங் செல்லும் அவரின் உறுதி என அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம்  ஆனால் மிக முக்கியமானது அவர் முற்றிலும் அந்நியர்களை கூட மனித நேயத்தோடு பார்க்கும் விதம். அவரது கருணையும், எளிமையும், சின்ன சின்ன விஷயங்கள் கூட வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள்.  நான் யோசித்ததுண்டு –  கோர்டனின் இடத்தில் நாம் இருந்தால் அந்த வயதில் அவரைப் போல முன்பின் தெரியாத யாரோ ஒருவரிடம் கேமராவை காண்பித்து பேசிக் கொண்டிருக்கவோ, நட்பு பாரட்டவோ முடியுமா என்று. அசாதரணமான மனித நேயமன்றி அது சாத்தியமேயில்லை. 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால், பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. அற்ப விஷயங்கள் என்று நாம் நினைக்கும் சில, அடுத்தவர்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவரோ, கடைகளில் பில் போடுபவரோ, ஸ்கூல் கிராஸிங் கார்டோ, இப்படி முன் பின் தெரியாத எத்தனையோ மனிதர்களை நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம். கடைசியாக நீங்கள் ஒரு முற்றிலும் அந்நிய மனிதரிடம் கருணையோடோ, அன்போடோ  எப்போது நடந்து கொண்டீர்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கீர்களா? 

மலை சார்ந்த நினைவுகள்

குழந்தைகளிடம் இயற்கை காட்சி  எதையாவது படம் வரையச் சொன்னால், பெரும்பாலான குழந்தைகள் மலை சார்ந்த ஏதோ ஒன்றைத் தான் எப்போதும் வரைவதை கவனித்திருக்கீர்களா? மலையை நேரில் பார்த்திராதா குழந்தைகளின் மனதில் கூட மலை என்ற பிம்பம் எப்படியோ பதிவாகி இருப்பது ஆச்சரியம் தான்.

நான் பிறந்து வளர்ந்த ஊரில், அப்போதெல்லாம் வீட்டு மொட்டை மாடியிலிருந்துப் பார்த்தால், மூன்று திசைகளிலும் மலையைப் பார்க்கும் பாக்கியம் இருந்தது. மேற்கே வேளிமலை, வடக்கே  தாடகை மலை, கிழக்கே மகேந்திரகிரி மலை. மலைகள் எனக்கு எப்போதுமே ஒரு விதமான ஆர்வமூட்டும் விஷயமாகவே இருந்து வருகிறது. மலைக்க வைப்பதானால் தான் மலை என்கிறோமா?!  

கீழே இருக்கும் படத்தில் நட்ட நடுவே இருக்கும் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும் ஊர் தான் நான் பிறந்த ஊர். ஏரியின் பெயர் தான் ஊரின் பெயரும் – புத்தேரி.

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்தோ, பேருந்து நிலையத்திலிருந்தோ இறங்கிய உடனேயே வெளியே பார்த்தால் சுற்றிலும் மலைகளைக் காணலாம். நாகர்கோவிலிலிருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல, ஏரிகள், குளங்கள், வயல்கள், இவை அனைத்துக்கும் பிண்ணனியில் மலைகள் என மிக ரம்மியமாக இருக்கும்.

பள்ளிப் பிராயத்தில் தாடகை மலை எரிமலை போல வெடிக்கப் போகிறது என்று யாரோ புண்ணியவான்  புரளியைக் கிளப்பி விட, தாடகை மலை  நிஜமாகவே வெடிக்கப் போகிறதோ என்று நானும் அண்ணனும் அவ்வப்போது தாடகை மலையை  வீட்டு மொட்டை மாடியிலிருந்து செக் செய்துக் கொண்டதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! கோடை விடுமுறை நாட்களில் வேளிமலை அடிவாரத்தை ஒட்டி ஓடும் கொரமணி ஆற்றில், இழுத்துக் கொண்டு ஓடும் தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டுக் குளிப்பது, அங்கிருந்து கிழக்கு நோக்கிப் பார்த்தால், பச்சைப்பசேல் என கடல் போல் பரந்து கிடக்கும் வயல்களின் அழகை பார்த்து ரசிப்பது என அதெல்லாம் ஓரு தனி அனுபவம்.

வேளிமலை அடிவாரத்தில் தான் நான் படித்த கல்லூரி இருக்கிறது. கல்லூரி நாட்களில் பேருந்தில் பயணம் செய்யும் போது, ஜன்னலோரம் அமர்ந்து மலையை ரசித்துக்கொண்டே பயணிப்பது இன்றும் மனதில் இனிய நினைவாக இருக்கிறது. ஒரு முறை கல்லூரியை கட் அடித்து விட்டு, வேளிமலைக்கு மேல் இருக்கும் ஃபால்ஸுக்கு  நண்பர்களுடன் செல்லும் போது, பாதி வழியில் திடீரென மழை வந்து இருட்டி விடவே,  வந்த தடம் மறந்து போனது. அப்பொதெல்லாம் செல்போன் என்ற ஓன்று வந்திருக்கவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி கீழே இறங்கி வந்தோம். இன்று நினைத்துப் பார்க்கும் போது அதெல்லாம் அட்வெஞ்சர் தான்.

அடியிலிருந்து மலையைப் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பிரமிப்புற்கு பல மடங்கு பிரமிப்பு மலையின் மேலிருந்து கீழே பார்க்கும் போது ஏற்படுவது. கல்லூரி நான்காம் வருடம் ஒரு முறை நண்பர்களுடன் கோதையாறு ஹைட்ரோ பவர் பிளான்ட் பார்க்க சென்றிருந்தோம். முள்ளும் மலரும் படத்தில் பார்த்திருப்பீர்களே, அதைப் போல வின்ச்சில் மலைக்கு மேலே செல்ல வேண்டும். அங்கிருந்து கீழே பார்த்தால், breathtaking view! அவ்வளவு அழகான இடம் அங்கே இருக்கிறது என்பது சொற்ப பேருக்கு மட்டுமே தெரியும். அப்படி பாதுகாக்கப்பட்ட பகுதி. மலைகளால் சூழப்பட்ட ஒரு பொக்கிஷம் போல இருந்தது. கீழே கூகுள் சேட்டிலைட் வியூ கொடுத்து இருக்கிறேன். யோசித்துப் பாருங்கள் – மலை மேலிருந்து பார்க்கும்போது எப்படி இருந்து இருக்கும்! இத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் கூட கண்ணில் அந்த காட்சி அப்படியே இருக்கிறது! 

ஒரு முறை மவுன்ட் ரெய்னியர் நேஷனல் பார்க்கிற்கு சென்றிருந்தோம். சியாட்டில் ஏர்போர்ட்டிலிருந்து  வாடகைக் காரை எடுத்துக்கொண்டு மவுன்ட் ரெய்னர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சியாட்டிலுக்கே உரிய மேக மூட்டம். மந்தமான வானிலை. கொஞ்சம்  கொஞ்சமாக மேக கூட்டங்கள் விலக, விலக, தூரத்தில் நெடிதுயரந்து ரெய்னர் மலை! கோவிலில் தரிசனத்திற்கு காத்துக் கொண்டு இருக்கும் போது திரையை விலக்கும் போது ஏற்படுமே, அப்படி ஒரு காட்சியனுபவம்! கடவுளே மலைவடிவாய் இருப்பதைப் போல. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவனாக இருந்தாலும், நான் பார்த்த மலைகளிலேயே மவுன்ட் ரெய்னர் தான்  கம்பீரமான மலை! அத்தனை உயரமாக(14410 அடி!), மணிமகுடம் போல பனி மூடி, கிட்டத்தட்ட வானைத் தொட்டுக்கொண்டு அல்லது வானிலிருந்து இறங்கி வந்தது போல மிகப்பெரிய மலை! மேகக்கூட்டங்களுக்கு நடுவே மவுன்ட் ரெய்னர் மலை முகடு, அந்த மலையே வானத்தில் இருப்பது போன்று அசாதாரணமாக இருந்தது. அந்தக் காட்சியை ரசிப்பதற்காவே ஒரு் எக்ஸிட் எடுத்து, அருகிலிருந்த ஒரு ஏரிக்கரையோரம் நிறுத்தி, நிதானமாக கண் குளிர பார்த்து விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

ராக்கி மவுன்டெய்ன் சென்றிருந்த போது முற்றிலும் எதிரான ஒரு அனுபவம். ஏதோ உந்துதலில் Old Fall River Scenic Roadல் நுழைந்து விட்டோம். ரோடு என்று அதை சொல்வதே தவறு. வெறும் மண்பாதை என்பதே சரியாக இருக்கும். பாதையின் தொடக்கத்திலேயே, இது ஒரு வழிப் பாதை, திரும்பி வர வழி கிடையாது என்று எச்சரிக்கை போர்டு வைத்திருப்பார்கள். அதாவது மலையில் ஏற ஆரம்பித்து விட்டால், பாதியில் பயந்து போய் திரும்பி வர வாய்ப்போ, வழியோ இல்லை.  முதல் 200 மீட்டர் வரைக்கும் பயமாக இருக்கவில்லை. அதற்கு மேலேப் போகப் போகத் தான் தெரிந்தது AWD இல்லாமல் அந்த பாதையில் செல்வது தற்கொலைக்குச் சமம். ஊட்டியின் ஹேர்பின் பென்டெல்லாம் ஒன்றுமே இல்லை என எண்ணும் அளவுக்கு அத்தனை குறுகலான, பெரும்பகுதி மண்ணால் ஆன பாதை. ஊட்டியிலாவது ரோட்டின் விளிம்புகளில் கல் வைத்து இருப்பார்கள். இங்கே பாதுகாப்பிற்காக எதுவுமே இருக்காது. ஒரு அடி தவறினால், மலையிலிருந்து குட்டிக்கரணம் தான்! சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ டைரக்ட் டிக்கெட் வாங்கி விடலாம். அப்படிப் பட்ட பாதையில், வெறும் Toyota Camryல், பின் சீட்டில் ஆறு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு, ஏதோ குருட்டு தைரியத்தில் ஏறி விட்டோம். ரியர் வியூ மிர்ரரில் பார்த்தால், பேயறைந்த மாதிரி பயத்தில் பின் சீட்டில் மனைவி. எனக்கோ, எப்படி ஒட்டப் போகிறோம் என்று உள்ளுக்குள்ளே உதறல். திரும்பிப் போகவும் வழியில்லை, எங்கேயும் நிறுத்தவும் முடியாது. பயத்தை வெளிக்காட்டாமல், முழுக் கவனத்துடன் கொஞ்சம் கூட அங்கே இங்கே கண் அசைக்காமல் ஒட்டி, ஓரு கட்டத்தில் இதற்கு மேலே நம் கையில் எதுவும் இல்லை என்று முடிவெடுத்து, காரில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்க விட்டு விட்டு, குல தெய்வத்தையும், மற்ற எல்லா தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒன்பது மைல் மலைப் பாதையை ஒரு வழியாக முக்கால் மணி நேரத்தில் கடந்து Alpine Visitor Centerஐ வந்தடைந்துவிட்டு அடைந்த நிம்மதி இருக்கிறதே, அதற்கு இணையே இல்லை!

நான் இப்போது இருக்கும் டாலஸ் நகரம் எவ்வளவு தட்டையானது என்றால், நான்கு திசைகளில் சுற்றிப் பார்த்தாலும் உயரமாக கண்ணுக்கு தெரிவது கட்டிடங்களாக இருக்கும் இல்லையென்றால் flyover பாலங்களாக இருக்கும்! இந்த ஊர் பாஷையில் சொல்வதென்றால் ‘Flat like pan cake’. அப்படியே மொழி பெயர்த்தால் ‘தோசையின் மேற்பரப்பைப் போல் ‘ தட்டையான ஊர்! கோவிடுக்குப் பின் அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் எனக்கென்னவோ அவர்களைப் பார்த்து ஒரு விதமான பரிதாபமான உணர்வே ஏற்படுகிறது. இங்கிருந்து நான்கு மணி நேரம் எந்த திசையில் பயணித்தாலும் ஒரே மாதிரியான நிலப்பரப்புக்குள்ளேயே இருப்பது போல் தோன்றும். மலையோ, கடலோ, காடோ அருகில் இல்லாத ஊரில் இருப்பவர்கள் என் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்களே! 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன், க்ராண்ட் கேன்யன் பார்த்த அனுவபத்தை விவரிக்கும் போது, கடவுளையே பார்த்தது போல இருந்தது என்று சொல்லியிருப்பார். Solitude in nature brings us closer to God என்று Emersonனும், Thoreauவும் சொல்லியிருப்பதும் அதைத்தானே!

நம் மரபில் metaphor ஆக சொல்லப்பட்ட பல விஷயங்கள் காலப் போக்கில் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளாகிப் போனது. மலைகள் தோறும் கோவில்கள் கட்டி வைத்த நம் முன்னோர்கள், சும்மா சாமி கும்பிடுவதற்காகத் தான் கட்டி வைத்தனர் என்று நினைக்கிறீர்களா? மலை ஒரு குறியீடு. இறைவனை அணுக வேண்டின், முதலில் இயற்கையை அறிய, அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதற்கு மலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் மலைகள் மேல் கோவில்கள் கட்டி வைத்தார்கள் என்றே எனக்குப்படுகிறது.

ட்வோராக்கும் சிட்டுக்குருவியும்

சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, FMல் ஆன்டோனின் ட்வோராக்கின் (Antonín Dvořák) Symphony No 9.  அதில் ஒரிடத்தில்  கேட்ட உடனேயே, மனதில் பதியும் ஒரு பீஸ் – ‘ஆகா, இதே மெட்டில் தமிழில் ஒரு பாட்டு இருக்கிறதே’ என போனை எடுத்துக் குறித்து வைத்துக் கொண்டேன்(வண்டி ஓட்டிக் கொண்டே!).  FM என்பதால், அந்த சந்தர்ப்பத்தை விட்டால், மீண்டும் அதே சிம்பொனி கேட்க வாய்ப்புக் கிடைப்பது அரிது. 

வீடு வந்தவுடன் நேரே மனைவியிடம் போய், ‘தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…’ இந்த மெட்டில் அமைந்த தமிழ்ப் பாட்டு ஏதாவது ஞாபகம் வருகிறதா எனக் கேட்கஅப்படி  எதுவும் கேட்ட மாதிரி ஞாபகம் இல்லையே என மனைவி சொல்லிவிட, என் மனதுக்குள் மட்டும் அந்த மெட்டு ஓடிக் கொண்டே இருந்தது. தத்..தத்..தரதாதத்..தத்..தரதா…  நான் பாடுவதைக் கேட்டு என் பையனும் , எங்கள் வீட்டு நாயும் மிரண்டு போய் எனைப் பார்க்க, இனிமேல் இவர்கள் முன்னே பாடக்கூடாது என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டேன்

அடுத்த நாள் எதேச்சையாக எங்கோ மனதின் மூலையிலிருந்து அந்த வார்த்தை எழுந்து வந்தது – ‘சிட்டுக்குருவி… தத்..தத்..தரதா… ‘. உடனே யூடுபில் தேடிப் பார்த்தால், முதல் பரிந்துரையிலேயே இருந்தது – “சிட்டுக்குருவி வெட்கப்படுது…’. 1985ல் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சின்னவீடு திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல். 

https://music.youtube.com/watch?v=01OLNQGKWPs

அந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு கூடவே ட்வோராக்கின் சிம்பொனியையும் சேர்த்து கேட்கும் போது வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து இளையராஜா நம் தமிழ் காதுகளுக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார் என ஆச்சர்யமாக இருந்தது.  சிலர் இது காப்பி இல்லையா என நினைக்கலாம். உண்மையில் ட்வோரோக்கின் சிம்போனியயையும், சிட்டுக்குருவி பாட்டையும் ஒன்றாக கேட்டால் தெரியும் அவர் அதிலிருந்து எடுத்திருப்பது ஒரு மிகச்சிறிய பகுதி. கர்நாடக சங்கீதத்தின் ராகங்களின் அடிப்படையில் அமைந்த எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம். அதற்காக அந்த ராகங்களை காப்பி அடித்துவிட்டார் என்று சொல்வது எத்தனை அபத்தம். அதே போல, விரல் நுனியில்  இன்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத அந்த காலகட்டத்தில், தான் பயின்ற வெஸ்டர்ன் க்ளாசிக்கில் இருந்து நம் மக்களுக்கு இது பிடிக்கும் என்று நம் ரசனைக்கு ஏற்ற மாதிரி அவர் உருமாற்றி இதைக் கொடுத்துள்ளார்.  நம்மில் எத்தனை பேருக்கு வெஸ்டர்ன் க்ளாஸிக்கோ, கர்நாடக சங்கீதமோ பரிச்சயம் அல்லது ரசிக்கத் தெரியும்? இந்த பாட்டைக் கேட்ட பின்னர், அந்த சிம்போனியே என் மனதில் ‘தத்..தத்..தரதா… தத்..தத்..தரதா…’ என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இளையராஜா அவர்களே ஓரு பேட்டியில் சொன்ன மாதிரி, இன்டர்நெட்டோ, செல்போனோ இல்லாத அந்த காலத்திலேயே மொஸார்ட்டையும், பீத்தோவனையும், பாஃக்கையும் நாமும் ரசிக்கும் அளவுக்கு நமக்குத் தெரியாமலேயே நம்மிடம் கொண்டுவந்தது சேர்த்தது அவரல்லவா! 

https://music.youtube.com/watch?v=KWQa-1HUCsQ

சிட்டுக்குருவி பாட்டில் கிட்டதட்ட பாட்டு முழுக்கவே bongos, bass guitar, drumms என அட்டகாசம் பண்ணியிருக்கிறார். ஒரிஜினலில் இருப்பதை விட கொஞ்சம் டெம்பொவையும் ஏற்றி இருப்பதால், சிம்பொனியை கேட்கும் போது நம் மனதில் எழும் உணர்விற்கும், சிட்டுக்குருவி பாட்டு  கேட்கும் போது நாம் உணர்வதும் முற்றிலும் வித்தியாசம். “தர தத் தத் தத்…” என்று தொடக்கத்தில் ஜானகியின் குரலைக்  கிட்டத்தட்ட ஒரு கருவி போல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறார். ஜானகியின் குரலின் மென்மையும், அதே நேரத்தில் கூர்மையும் கிட்டத்தட்ட புளூட்டோ, கிளாரினெட்டோ போல ஒலிக்கிறது. Overlapping போல SPB, ஜானகியின் குரலோடு இணைந்து வரும் போது  பாட்டு வேறு உயரத்திற்கு செல்கிறது. பாஸ் கிட்டார் கிட்டத்தட்ட முழுப் பாட்டுக்கும்  கூடவே வருகிறது.   

பாட்டின் முழு போக்கும் call-and-response-ஐப் போல, SPB ஒரு teasing phrase விடுவார், Janaki அதற்கு mild-ஆக பதிலளிப்பார். Orchestration அந்த conversation-ஐத் தொடர்ந்து பேசும் மூன்றாவது குரலாக மாறுகிறது. எங்கே SPB வாக்கியத்தில் consonant sharpness இருக்கிறதோ, அங்கே percussion அதை highlight செய்யும். எங்கே Janaki வார்த்தையில் vowel elongation இருக்கிறதோ, அங்கே strings அதை underline செய்யும். பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தால், வார்த்தைகளே கருவி மாதிரி ஒலிக்கத் தொடங்குகிறது. இசை, குரல், வார்த்தை – மூன்றுமே ஒன்றோடொன்று கலந்து, கலைந்து போவது  இளையராஜாவின் மாயாஜாலம் தான்.

முதல் interludeல்,  அருமையான ஒரு fluteஐ கொடுத்தவர், இரண்டாவது interludeல் முற்றிலும் western harmonyஐக் கொடுத்து, ஒரு பரிணாமத்தில் ஆரம்பித்த பாட்டை, இரண்டாம் பாதியில் இன்னொரு பரிணாமத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

பாட்டின் வரிகளை கீழே கொடுத்து இருக்கிறேன். டபிள் மீனிங் என்பதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, வார்த்தைகளை மட்டும் பாருங்கள். கிட்டதட்ட முழுவதுமே வல்லினத்திலேயே எழுதப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வரியின் தொடக்கத்திலும் இரண்டாவது எழுத்து குற்றெழுத்து. ஒரு நான்கைந்து முறை பாடி அல்லது சும்மா படித்துப் பார்த்தாலே நமக்கு  நாக்கு சுளுக்கிக் கொள்ளும் tongue twisters.  ஆனால், SPBயின் குரல் எவ்வளவு லைட்டாக, effortless ஆக ஓடுகிறது பாருங்கள்; பாட்டின் அர்த்தம் புரிந்து புன்னகைத்துக் கொண்டே பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். பொதுவாக, ஜானகியும் SPBயும் இணைந்து பாடும் போது, ஜானகியின் குரலில் ஒரு dominance இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பாட்டில் ஜானகியின் குரலில் அத்தனை மென்மை, குழைவு!

பாடல் முடிவடையும் போது, எப்படி ஆரம்பத்தில் ஜானகி குரல் மேல் SPB overlap செய்திருப்பாரோ, அதேப் போல, முடிவில் SPB குரல் மேல் ஜானகி குரல் overlap செய்வது போல பண்ணியிருப்பார்.

இந்த பாட்டைப் பற்றி இன்டர்நெட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சேகரித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  1. இளையராஜா இந்த மெட்டமைத்த பின்பு இது மிகவும் கடினமான மெட்டு, இதற்கு பாட்டு எழுதுவது கடினம் என்று சில கவிஞர்கள் முயற்சி செய்து பின்னர் பின்வாங்கிவிட்டனர்.
  2. வேறு வழியின்றி வைரமுத்துவை அழைத்து வர, அவர் சவாலான இந்த மெட்டுக்கு சவாலான பாட்டு என வேண்டுமெனவே வல்லினம் மிகுதியாக எழுதினாராம்!
  3. இவர்கள் இருவரின் சவாலை பாடும் போது அநாயசமாக கடந்து போயிருப்பார்கள் SPBயும் ஜானகியும். 
  4. இந்தப் பாட்டை கச்சேரிகளில் வெகு அபூர்வமாகவே கேட்க முடியும். கடினமான பாட்டு என்பதோடு பாடி முடித்தபின் வாய் வலிக்கும் என்பதால். 

பாட்டு நன்றாக இருக்கிறது என்பதற்காக தப்பித்தவறிக் கூட யூடூபில் இதன் வீடியோவை மட்டும் பார்த்து விடாதீர்கள். இவ்வளவு அழகான பாட்டை இதை விடக் கேவலமாக எடுக்க முடியாது என்கிற லட்சணத்தில் இருக்கிறது! ரீ ரிக்கார்டிங்கின் போது இளையராஜா எவ்வளவு நொந்து போயிருப்பார்!!!  

நம்மைப் போல் இலர்

“Work from home” சொகுசு மெல்ல மறைந்து, மீண்டும் அலுவலகம் செல்வது இயல்பாகிக் கொண்டிருப்பதால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணத்தில் கழிக்க வேண்டிய கட்டாயம். பயண நேரத்தில் பாட்காஸ்ட் கேட்பது பழக்கம். பெரும்பாலும் எகனாமிக்ஸ் அல்லது வரலாறு, சில நேரங்களில் நாட்டு நடப்புகள்.  சமீபத்தில் ஜெமோ தளத்தில் அவரின் unified wisdom பேச்சுக்கள் Spotifyயிலும் வெளியிடுகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பரவாயில்லையே, இனி பயண நேரத்தில் ஜெமோவைக் கேட்போம் என்று சில நாட்களாக அவரின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். 

இன்று அவர் பேசிய தலைப்பு ‘இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை’. https://open.spotify.com/episode/6hZm1v6Tltjo8rRitOHKfw?si=fk3fWyB6SK6XOR__e5YgFQ. அடுத்த தலைமுறை எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் பார்த்த அனுபவமுள்ள யாரும் இதை எளிதாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது வேறு ஒன்று. 

unified wisdom நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு வர சிலர் கேட்ட luxuries. அடப் பாவிகளா, இப்படி எல்லாம் கூட இருக்கிறார்களா என நிஜமாகவே திகைப்பை ஏற்படுத்தியது!  இத்தனை பொன்னான வாய்ப்புகள் வாசலில் வந்து கதவைத் தட்டும் போது கூட அதன் அருமை தெரியாது இருக்கிறார்கள் என்பது பெரும் ஏமாற்றமே. 

அதிலும் ஓரிருவர் பெங்களூர்/டெல்லி போன்ற பெரிய நகரங்களில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கவனியுங்கள், கலந்து கொள்ள, கற்றுக் கொடுக்க அல்ல, வருவதற்கு அமைப்பாளர்களிடமே பயணப்படி கேட்டார்கள் என்று அவர் சொன்ன போது இந்தப் பதர்கள் எத்தனை மண்டைக்கனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. கார்ப்பொரேட் ட்ரெயினிங் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் போல. ஞானத்தை, அறிவை வழங்குகிறேன் என ஒருவர் அழைத்தால், அதற்கு பயணப்படி கேட்பேன் என ஒருவன் கூறுவானேல், அவனை மடையன் என்றல்லாமல் வேறென்ன சொல்வது?!

ஜெமோவை படிப்பவர்கள், பின் தொடர்பவர்கள் எப்படி இருப்பார்கள் என மனதில் ஒரு பிம்பம் இருந்தது – பண்பட்டவர்கள், செயல்திறம் கொண்டவர்கள், நல்ல ரசனையுள்ளவர்கள் என. நானறிந்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் தான். ‘Classy’ என்று சொல்லத்தக்கவர்கள். ஆனால், இன்றைய பாட்காஸ்ட் கேட்டபின் மேற்கூறிய எந்த குணாதிசயங்களும் இல்லாதவர்களும் ஜெமோவை பின் தொடர்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு உள்மனம் உறுத்தாதா? பெங்களூரிலிருந்து ஈரோடுக்கு டாக்‌ஸியில்தான் வருவேன், 20000 பயணப்படி கொடுக்க முடியுமா என்று கேட்டவனை எந்த categoryயில் சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

பட்டாம்பூச்சி விளைவு

சரியாக பத்து நாட்கள் ஆகிறது – ஜெயமோகன் தளத்தில் ‘டாலஸ் சந்திப்பு’ தலைப்பில் நண்பர் ப்ரதீப் அவர்களின் பதிவைப் படித்து. 

ஜெமோ தன் தளத்தில் கடிதங்களை வெளியிடும்போது, பெரும்பாலும்   புகைப்படங்களுடன் சேர்த்து  வெளியிடுவதைக் கண்டு முன்பெல்லாம் நான் நினைத்ததுண்டு, எதற்காக புகைப்படங்களையும் சேர்த்து வெளியிடுகிறார் என. ஆனால் அந்த பதிவில் அவர் ‘டாலஸ் சந்திப்பு’ புகைப்படத்தை இணைத்திருக்காவிட்டால் கீழ் வரும் எதுவுமே நடந்திருக்காமல் போயிருக்கலாம். 

அந்த புகைப்படத்தை பார்த்த உடனே அதில் இருந்த செந்தில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். செந்தில் நான் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர் மற்றும் இருமுறை அப்பகுதி தமிழர்கள் கூடிச் சந்தித்த போது அறிமுகம். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர் என்பதோடு எங்கள் பக்கத்து மாவட்டத்துக்காரர் என்பதால் மனதில் பதிந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவரைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவர் தனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றோ, தான் யூடூபில் திருக்குறள் சேனல் நடத்திவருவது குறித்தோ அந்த இரு சந்திப்புகளிலும் காட்டிக் கொள்ளவில்லை (அல்லது நான் கவனித்திருந்திருக்கவில்லை). அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  The universe listens என்பது போல, அடுத்த நாளே, அவர் எங்கள் பகுதி வாட்ஸாப் தமிழ்க் குழுவில், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பாக நடக்க இருக்கும் கம்ப ராமாயணக் கச்சேரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட, அவர் நம்பரைக் குறித்துக் கொண்டு அவருக்கு ஒரு மெசஜ் தட்டலாம் என டைப் செய்துக் கொண்டிருக்கும் போதே, ஏதோ வேலை வர, அவசரத்தில் தவறுதலாக, அறைகுறை மெசஜ் அவருக்கு  போய்விட, அதை உடனடியாக டெலிட் செய்து விட்டு வேலையில் மூழ்கி விட்டேன். 

சாயங்காலமாக அவரிடமிருந்து ஒரு குறுந்செய்தி ‘தொடர்பு கொள்ள முயற்சி செய்தீர்களா’ என. உடனே அவரை போனில் அழைத்து ‘நீங்க திருநெல்வேலி செந்தில் தானே, நான் கணேஷ், நாகர்கோவில், இதற்கு முன்பு இருமுறை சந்தித்திருக்கிறோம்’ என அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர் ‘உங்கள் குரலை வைத்து அடையாளம் தெரிகிறது’ என்க, மலையாள வாசம் வீசும் நம் தமிழைத்தான் அப்படி நளினமாக சொல்கிறார் என நினைத்து லேசாக மனதில் சிரித்துக் கொண்டே, அவரிடம் நான் ஜெயமோகன் தளத்தை வாசிப்பதைக் குறித்தும், அதில் அவரின் புகைப்படத்தைப் பார்த்ததையும் சொன்னேன். அவருக்கும் ஆச்சர்யம். அவர் டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இரு வாரங்களுக்கு ஓரு முறை நூலகங்களில் சந்தித்து உரையாடுவதைப் பற்றி கூறி, வரும் ஞாயிறன்றும் ஃப்ரிஸ்கோ நூலகத்தில் கூட இருப்பதாகவும், முடிந்தால் வாருங்களேன் என அழைக்க, இலக்கியச் சந்திப்புகளில் பங்குபெறும் அளவிற்கு நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என்று உள்ளுக்கள்ளே ஒரு கேள்வி எழ, ஆனாலும் ஒருமுறை சென்று பார்க்கலாமே என்று அவரிடம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் வாட்சப் குரூப்பில் என்னை சேர்த்துவிடவும், சிறிது நேரத்தில் பிரதீப் அவர்கள் அழைத்து பேசினார்.

பிரதீப் அவர்களிடம் பேசும் போது நான் 2022ல் ஜெமோ டாலஸ் வந்திருந்த போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்ததைப் பற்றி கூற, அவர், ‘அப்படியா, அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன், என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறதா எனப் பார்க்கிறேன்’ எனக் கூறி, வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் இலக்கியச் சந்திப்பு பற்றியும், டாலஸ் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் பற்றியும் சுருக்கமாக விளக்கினார். நான் நமக்கு வாசிப்பு தகுதி இருக்கிறதா என எனக்குள் இருக்கும் தயக்கத்தை வெளிப்படுத்த, ‘பரவாயில்லை, வாருங்கள். இது நட்பார்ந்த கலந்துரையாடல்’ என்று ஊக்கப்படுத்தினார். சிறிது நேரத்திலேயே ஞாயிறன்று கலந்துரையாடுவதற்கான நான்கு கதைகளின் சுட்டியையும் கொடுத்து உதவினார். 

அந்த இலக்கியச் சந்திப்பிற்குப் பின் அவர்களிடமிருந்த ஏதோ ஒரு பொறி, என்னுள் அணைந்திருந்த கங்குகளை பற்ற வைத்ததைப் போல், மீண்டும் மீண்டும் அந்த கலந்துரையாடல் மனதுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கவே, அதைப் பற்றிய நினைவுக்குறிப்புகளை பதிவு செய்யலாம் என்று தமிழில் தட்டச்சு செய்யலாம் என்று ஆரம்பித்து – கவனிக்க, நான் முன் பின்னே  தமிழில் தட்டச்சு செய்து பழக்கமில்லாதவன் – அது அப்படியே ஓரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வைத்தது. இப்போது திரும்பிப் பார்க்கும் போது, இந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழில் டைப் செய்துள்ளேன். தினமும் மீண்டும் தமிழில் படிக்க , ஆழ்ந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். 

உலகில் எங்கோ ஓரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடிப்பதற்கும், வேறொரு மூலையில் சுனாமி வருவதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பது போல, எங்கோ இருந்து ஜெமோ வெளியிட்ட ஒரு பதிவு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை நினைத்துப் பார்க்கிறேன். 

எழுத்தாளர் ஜெயமோகன் சந்திப்பு – 2022

நாகர்கோவிலில் இருந்த காலங்களில், அதாவது எனது 21வது வயது வரை, ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களையோ அவரைப் பற்றியோ எதுவும் தெரியாமலேயே இருந்திருக்கிறேன் என்று இன்று நினைத்துப் பார்க்கும்போது கூச்சமாக இருக்கிறது. 

அப்போதெல்லாம் என் வாசிப்பு என்பது வெகுஜன பத்திரிக்கைகளில், முக்கியமாக விகடனில், எழுதி வந்த பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களைத்தாண்டி, நானாக லைப்ரரியில் இருந்த புத்தகங்களுக்குள் தேடிப் படித்த புத்தகங்கள் மட்டுமே. ஒரு வழிகாட்டியோ, துணையோ இல்லாமல் யார் யாரையோ வாசித்து வந்திருந்தேன். அடுத்த பத்தாண்டுகள் வேலை, வேலை சம்பந்தமாக வாசிப்பு, பெரும்பாலும் அபுனைவுகள் என்று ஓடிவிட்டது.  2010களில் அலுவலக வேலைகளை குறைந்த நேரத்தில் என்னால் செய்து முடித்து விட முடியும் என்று ஆன பின்பு, கைவசம் நிறைய நேரமும், இணைய வசதியும் இருக்க the old itch started. இணையத்தில் தமிழைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். Blogging தமிழில் பரவலாகியிருந்த அந்த காலகட்டத்தில் எங்கோ ஓருவர் ஜெமோவை வசை பாடி எழுதி வைத்து இருக்க, எதற்காக அவர் இப்படி வசைபாடப்பட்டிருக்கிறார் என்ற ஆர்வத்தில் ஜெயமோகன் தளத்திற்குள் நுழைந்தேன். Fell into the rabbit hole என்பதைப் போல அன்று ஆரம்பித்த பயணம். 

இப்படி ஒரு ஆளுமை நம் வீட்டிலிருந்து 15 நிமிட நேர தூரத்தில் இருந்திருக்கிறார்,இருக்கிறார் என்பது தெரிய வந்த போது நான் 15000 கிலோமீட்டர்கள் தாண்டி வந்திருந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தளத்தை வாசிப்பது ஒரு அன்றாடப் பழக்கமாகவே ஆகிப் போனது. மானசீகமாக அவரை ஒரு குருவாக மனதில் வரிந்து கொண்ட போதும், என்றாவது அவரைச் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததில்லை.  

இடையில் இரண்டு மூன்று முறை இந்தியா சென்றிருந்த போது, பார்வதிபுரம் போய் சாரைப் பாரத்துவிட்டு வருவோமா என்று மனதில் ஆசை எழுந்தாலும், ஆதர்ச ஆளுமைகளை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று படித்திருந்ததாலும், அவரை நேரில் பார்த்து பேசும் அளவிற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று புத்தி ஆசையை அடக்க, அவரின் புத்தகங்களையோ, அவர் பரிந்துரைத்த புத்தகங்களையோ டவர் ஜங்ஷன் கிருஷ்ணா புக் ஸ்டாலில் வாங்கி கொண்டு வந்து விடுவேன். 

2022ல் ஜெமோ அமெரிக்கா வருகிறார், அதுவும் டாலஸ்ஸுக்கும் வரப் போகிறார் என்று அவர் தளத்தில் அறிவிப்பு வெளியான போது இம்முறை அவரைச் சந்திக்கலாம் என்று புத்தி அனுமதி கொடுக்கவே, ஆஸ்டின் சௌந்தர் அண்ணாவுக்கு கடிதம் எழுதி ஜெமோவைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரியப்படுத்தி, அவரின் டாலஸ் நிகழ்ச்சி விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். மே 17, 2022, செவ்வாய்க்கிழமை, கோப்பெல் லைப்ரரி. 

ஜெமோ சந்திப்பிற்காக நான் என் அமெரிக்க மேனஜரிடம் அரை நாள் விடுப்பு கோர, அவர் நான் என் ஆதர்ச எழுத்தாளரைச் சந்திக்க போகிறேன் என்பதைக் கேட்டு மிகுந்த ஆர்வத்துடன் தமிழைப் பற்றியும், ஜெமோவைப் பற்றியும் என்னிடமும், கொஞ்சம் கூகுளிலும் தெரிந்து கொண்டு ‘I’m proud of you, man! You have such a legacy and I’m glad you are still in touch with your roots’ என்றது பெருமையாக உணர்ந்த தருணம்.

நாம் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமையை நேரில் சந்திக்க செல்லும்போது வெறும் கையோடு செல்வதா என்றெண்ணி, அவருக்கு எதையாவது பரிசளிக்கலாம் என்று நினைத்து வால்மார்ட்டிலும், டார்கெட்டிலும் இரண்டு மணிநேரம் கரங்கி முடிவெடுக்கமுடியாமல் குழம்பி, கடைசியில் மனைவிக்கு போனைப் போட்டேன். அச்சமயம் அவர் ஒரு ட்ரீட்மென்டுக்காக குழந்தையுடன் பெங்களூரில் தாய் வீட்டில் இருந்தார். நடுச்சாமத்தில் என் அழைப்பைக் கண்டு பதறி, என் மனைவி என் குழப்பத்தைக்கேட்டு சிரிப்பதா அழுவதா என்கிற நிலையில், ஜெயமோகன் அவர்கள் நிறைய பயணிப்பதால் அதற்கு உபயோகமாக இருக்கும்படி எதையாவது வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூற, ஒரு சிறிய travel accessories bag வாங்கிக்கொண்டேன்.

அடுத்த நாள் ஜெமோ சந்திப்பு. இரவே அவருக்கு வாங்கிய அன்பளிப்பை gift wrap செய்து விட்டு அதையும், விஷ்ணுபுரம் புத்தகத்தையும் பேக்கில் வைத்து விட்டு ஒரு விதமான anxietyயோடே தூங்கப் போனேன்.

10 மணிக்கு ஜெமோ சந்திப்பு. 9:45க்கே லைப்ரரிக்கு சென்று விட்டேன். சுமார் 10 பேர் அதற்கு முன்னரே வந்து அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஓரிருவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தனர். சிலர் கைகளில் புத்தகங்கள். 

பெரும்பாலனவர்கள் கேஷுவலான உடையில் வந்து இருந்தது சற்று ஏமாற்றமே! ஒரு பெரும் ஆளுமையை சந்திக்கச் செல்லும்போது சிறப்பாக உடை அணிந்து செல்வது அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை. நம்மவர்களுக்கு அது ஏனோ புரிவதேயில்லை. ஒருமுறை ஜேசுதாஸ் அவர்கள் மலையாளிகள் அசோசியேஷன் நிகழ்ச்சிக்காக டாலஸ் வந்திருந்தபோது அவரைக் காண வந்திருந்த மலையாளிகள் அனைவரும் டிப் டாப்பாக ஃபார்மலாக உடை அணிந்து வந்திருந்ததை நினைத்துக் கொண்டேன். அது தாசேட்டனுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையின் வெளிப்பாடு. 

யாருடனும் பரிச்சயமில்லாததாலும், இயல்பான கூச்ச சுபாவத்தினாலும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு பரபரப்பு. ஜெமோ வந்துவிட்டாரென. காத்திருந்த நாங்கள் அனைவரும் நூலகம் உள்ளே அழைத்துச் செல்லப் பட்டோம். ஓரிரு நிமிடங்களில் ஜெமோவும் அருண்மொழி மேடமும் அவர்கள் உள்வட்ட நண்பர்கள் புடைசூழ உள்ளே வந்தனர். மிக இயல்பாக, மெல்லிய புன்னகையுடன், approachable personality ஆக ஜெமோ வந்தார். ஏனோ ஜெமோவின் முகம் மறைந்துபோன, என் பிரியமான பெரியப்பாவை நொடிநேரம் ஞாபகப்படுத்தியது. 

நான் படித்து வியந்த ஒரு ஆளுமை, வாழ்வின் பல விஷயங்களை அறிய வைத்த, ரசனயை கூர் படுத்திய, குரு ஸ்தானத்தில் மனதில் வைத்திருக்கும் ஒருவரை அன்று அத்தனை பக்கத்தில் பார்க்கிறோம் என்ற படபடப்பு அடங்கவே சில நிமிடங்கள் ஆனது. 

ஒரு வாசகி கடவுள் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவர் கர்ப்பிணியாக இருந்ததாக நினைவு. 

கேள்வி பதில் ஃபார்மெட்டில் அமைந்த நிகழ்வென்பதால், கேள்விகளைக் கேட்கலாம் என்று கூற, முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி, ‘நீங்கள் சமஸ்கிருதத்தை செத்த பாஷை என’ என ஆரம்பிக்க, ஜெமோ உடனே குறுக்கிட்டு, நான் எங்கே எப்போது அப்படி சொன்னேன் என்று அந்த பெண்ணிடம் கேட்க, அவர் ஏதோ சொல்ல திக்கித் தடுமாற, ஜெமோ தனக்கே உரிய பாணியில் எப்படி சமஸ்கிருதம் தொடர்பு மொழியாக இருந்ததே தவிர அது எப்போதுமே common man’s language ஆக இருந்ததில்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் பொறுமையாக விளக்கினார். இந்த மனிதர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக, தமிழ்ச்சூழலில் இதைப் போல் எத்தனை தத்தித்தனமான கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். விரக்தி அடையாமல் இன்னும் கூட இதைப் போன்ற கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்கிறார் என்றால் இந்த மனிதர்கள் மேல் அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குப் பிறகு வழக்கமான வாசகர் கேள்விகள். அவரை நெடுநாள் வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரியும் கொஞ்சம் தேடினால் அவர் தளத்திலேயே நமக்கான பதில்கள் எங்கோ ஒளிந்திருக்கும் என்று. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் தமிழை வளர்ப்பது எப்படி என்ற ரீதியில் ஏதோ கேட்க, எனக்கு நிஜமாகவே யார் இவர்கள், எங்கிருந்து வருகிறார்கள், யாரிடம் கேட்கிறோம், என்ன கேட்கிறோம் என்ற எந்த லஜ்ஜையும் இல்லாமல் எப்படி இவர்களால் ஒரு அரங்கில் ஒரு பெரும் ஆளுமையிடம் இம்மாதிரி கேள்வி கேட்க தோன்றுகிறது என இருந்தது. அதன் பின்னே பெருவாரியான நேரத்தை St.Louisல் இருந்து வந்திருந்த ஒரு அன்பரும் RJ என அறிமுகப்படுத்திக் கொண்ட இன்னொரு அன்பருமே எடுத்துக் கொண்டனர். ஜெவின் பேச்சைக் கேட்க வந்தோமா, இவர்கள் இருவரின் பேச்சைக் கேட்க வந்தோமா என லேசாக சலிப்படைய ஆரம்பிக்கும் போது ராலே ராஜன் நேரமாகிக்கொண்டிருக்கிறது என்று வந்து காப்பாற்றினார்.

கேள்வி பதில் முடிந்து ஜெவிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் அறிவிக்க, வழக்கம் போல், நம்மவர்கள் ஜெவை மொய்த்துக்கொள்ள, விஷ்ணுபுரம் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு, வரிசை மாதிரி ஒன்றில் நானும் சேர்ந்து கொண்டேன். எதேச்சையாக புத்தகத்தை புரட்டிப்பார்த்த எனக்கு பேரதிர்ச்சி! என் மூன்று வயதுப் பையன் அதில் தன் கைங்கர்யத்தை காட்டியிருந்தான். ‘அய்யோ மகனே, பொக்கிஷம் போல வைத்திருந்த புத்தகத்தில் எப்போதடா இந்த கிறுக்கல் காரியத்தைப் பண்ணினாய்’ என மகனை நினைத்துக்கொண்டு, இதை எப்படி ஜெமோவிடம் காண்பித்து ஆட்டோகிராப் வாங்குவது, ஒருவேளை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து இது கண்ணில் பட்டால் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டாரா என்றெண்ணி, நைசாக அந்த வரிசையில் இருந்து நழுவி பக்கத்தில் அருண்மொழி மேடமை சுற்றியிருந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டேன். பார்ப்பதற்கு ஊரில் பக்கத்து வீட்டு அக்காக்களைப் போலிருந்ததால் குருவைப் பார்க்கும் போது இருக்கும் பயம் கலந்த மரியாதைப் போலன்றி அவரிடம் இயல்பாக பேச முடிந்தது. அவரிடம் நான் கொண்டுபோயிருந்த கிஃப்டைக் கொடுக்க, அவரோ ‘அய்யே, அவர்தாங்க ரைட்டர், அவர்கிட்ட கொடுங்க’ எனச்சொல்ல ‘பரவாயில்லை மேடம், சாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது’ என்று சொல்லி அவரிடமே கொடுத்துவிட்டு, வந்த மட்டுக்கு ஜெமோவோடு ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்வோம் என்று வரிசையில் நின்று ஜெமோவோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து ஜெமோவை மதிய உணவுக்கு ஒரு மெக்ஸிகன் உணவகத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும், விருப்பமுள்ள வாசகர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்தனர். Chipotle விட்டால், வேறு மெக்ஸிகன் உணவு நமக்கு ஒத்து வராது என்பதாலும், அலுவலகம் போகவேண்டியிருந்ததாலும் அங்கிருந்து நான் விடை பெற்றுக்கொண்டேன்.

இந்த வருடம் ஜெமோ மீண்டும் டாலஸ் வர இருக்கிறார். இம்முறை என் பையனை அழைத்துக்கொண்டு போகவேண்டும், அவரிடம் அவனை ஆசிர்வதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். ஆறு வயதான அவனுக்கு ஜெமோவின் பேச்சு புரியாமல் போகலாம், ஆனால் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரும் ஆளுமையைப் பார்த்து அவனுக்கு ஒரு  inspiration கிடைக்கலாம்.

விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு, ஜெமோ முன்னெடுத்துச் செல்லும் இலக்கிய பயணத்தில் உங்களில் பெரும்பாலோர் அவருக்கு மிக அணுக்கமானவர்கள், அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் முன் வரிசையில் அவருடன் பயணிப்பவர்கள். நான் எங்கோ கடைக்கோடியில், தாமதாமாக அந்த பாதையை கண்டறிந்து பின்னால் வருபவன். எனவே பின்வருபவை என் தனிப்பட்ட அவதானிப்புகளே தவிர, அறிவுரை அல்ல. உங்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு வாசிப்பனுபவமோ, தகுதியோ எனக்கு இருப்பதாகவும் நான் நம்பவில்லை. 1) அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரை மேடைக்கு அழைத்துவருவதற்கு முன்பு அவரைப் பற்றி ஒரு presentation அல்லது சுருக்கமாக ஒரு documentary ஒட விடலாம். வருபவர்கள் அத்தனை பேருக்கும் ஜெமோவை தெரிந்து இருக்கும், அல்லது அவரை வாசித்திருப்பார்கள் என்று நம் தமிழ்ச்சூழலில் எதிர்பார்ப்பது நியாயமாகுமா? சில பேர் தமிழ் மீதான ஆர்வத்தில் வந்திருக்கலாம், சிலர் அவரை சினிமா மூலமாக அறிந்து ஏதோ ஆர்வத்தில் வந்திருக்கலாம். 2) அவர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல், கேள்வி பதில் மாதிரியான நிகழ்ச்சிகளை விஷ்ணுபுரம் நண்பர்கள் யாராவது moderate செய்தால் தத்தித்தனமான கேள்விகளையும், ஓரிருவர் மொத்த நிகழ்ச்சியயையும் hijack செய்வதையும் தவிர்க்க அது உதவும். 3) சினிமா நட்சத்திரங்களை சுற்றி வளையம் அமைத்து வரும் bouncers போலயோ, தொண்டர் படை சூழ வரும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் அவரைச் சூழ்ந்து வருவதை தவிர்க்கலாம். 4) பெரும்பாலன நிகழ்ச்சிகள் நூலக அரங்குகளிலேயே நடை பெறுவதால், ஜெமோவின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை அந்நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம். தமிழில் படிக்கத் தெரியாத நம் இளைய தலைமுறைக்கும், பிற மொழி, இனத்தவர்களுக்கும் அவர் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களை கொண்டுச் செல்ல எளிதாக இருக்கும்.

இளையராஜா கன்சேர்ட் – 2018

2018ல் இளையராஜா அமெரிக்காவுக்கு concert நடத்த வரப்போகிறார் என்று தெரிந்ததுமே கண்டிப்பாக இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று டிக்கெட் புக்கிங்கிற்காக காத்துக்கொண்டிருந்தோம். துரதிஷ்டவசமாக டாலஸ் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை! மனம் தளராமல் ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கான டிக்கெட் தேடிப்பார்த்ததில், அங்கு டிக்கெட் இருந்தது, அதுவும் 10வது வரிசையிலேயே! அன்றைய என் பணநிலைக்கு அது சற்றே பெரிய தொகை. மேலும் ஹூஸ்டன் 300 மைல் தூரம், நான்கரை மணிநேர பயண நேரம். ஆனாலும் இளையராஜவை பார்க்கப் போகிறோம் என்பதற்காக நானும் மனைவியும் அதற்கு தயாராக இருந்தோம்.  நிகழ்ச்சி நாளன்று பின்காலைப்பொழுதில் புளிசாதம் கட்டிக்கொண்டு டாலஸிலிருந்து ஹூஸ்டன் நோக்கி காரில் கிளம்பினோம். நான்கரை மணிநேரமும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டே.   ஒரு மாபெரும் ஆளுமையை, சாதனையாளரை பார்க்கப் போகிறோம் என்பதால் நல்ல உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காக Sugarland Event Center அருகே ஒரு ஹோட்டல் புக் செய்து உடை மாற்றிக் கொண்டு சென்றோம். 6000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான உள் அரங்கம். மேடையிலிருந்து நூறடி தூரத்திலேயே எங்கள் இருக்கை அமைந்திருந்தது, இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இளையராஜா வருகைக்காக மேடையையே பார்த்துக் கொண்டிருக்கும்போது, இளையராஜா வெள்ளுடை அணிந்த ஒரு தேவதூதன் போல மேடையில் தோன்றினார். அவரைக்கண்ட அந்த க்ஷணத்தில் மொத்தக் கூட்டமும் தாமாக எழுந்து நின்று கை தட்டி அவரை வரவேற்க, ஆர்மோனியத்தில் கையை வைத்து அவர் ‘ஜனனி.. ஜனனி…’ என்று ஆரம்பிக்க, கண்களில் என்னை அறியாமல் நீர்த் துளிர்த்தது. எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டிருப்போம், இன்று நேரடியாக, என்பது பேர் கொண்ட பிரம்மாண்டமான ஹங்கேரி  ஆர்கெஸ்ட்ராவோடு அவர் பாடக்கேட்பது எத்தனை பாக்கியம்!

ஒரு மனிதன் மூன்று மணிநேரம், ஒரு பிரம்மாண்டமான அரங்கில், மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் தன் இருப்பால், தன் இசையால் 5000 மக்களை கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்பதெல்லாம் மாயாஜாலம் அன்றி வேறென்ன?

SPB அவர்கள் இளையராஜாவை செல்லமாக ‘அவன் ஒரு இசை இராட்சசன்’ என்று ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் அன்று இளையராஜாவைப் பார்க்கும்போது அவர் சாதாரண மனிதன் போலன்றி, ஒரு அவதாரம் போன்றே தோன்றினார். அப்போது அவருக்கு 75 வயது என்று நினைவு. அந்த வயதிலும் ஒருவர் தளர்வின்றி, மூன்று மணிநேரம் நின்று கொண்டே, ஒரு பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ராவை லைவ்வாக நடத்துவது என்பதெல்லாம் சாதாரமான காரியமா? தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைக்கு (அல்லது தன்னை தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைக்கு), தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரால் தான் இத்தனை வயதிலும் இப்படி இயங்கமுடியும்.

அன்று அவரிடமிருந்து ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு காந்த சக்தி நம்மை ஊடுருவி செல்வதைப் போல் உணர்ந்தேன். சில கோவில்களில் தெய்வத்தின்முன் நிற்கும் போது உணர்வோமே, அதைப்போல.

அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கள் வீட்டில் ஒரே இளையராஜா புராணம் தான். இந்த நிகழ்ச்சி நடந்து ஏழு வருடங்கள் ஓடி விட்டன. இன்னமும் அந்த அனுபவத்தை ஒரு பொக்கிஷம் போல மனதில் சேர்த்து வைத்துள்ளேன்.

நுலக அனுபவம்

பள்ளிப் பருவத்தில், நான் படித்த அரசுப்பள்ளியில் நூலகம் என்ற ஒன்று இருக்கவில்லை. எங்களூரில் ஒரு வாசிப்பு சாலை இருந்தது. நாளிதழ்கள், வார இதழ்களுக்கு மேலே புத்தகங்கள் என்று பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக அங்கு எதுவும் இருந்ததாக நினைவில்லை.

பதின்வயதில் நானாக பஸ் ஏறி நாகர்கோவில் செல்ல ஆரம்பித்த பின் செய்த முதல் காரியம், நாகர்கோவில் மைய நூலகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கியது. அப்போது மைய நூலகம் ஒழுகினசேரி டென்னிஸ் கிளப் அருகே ஒரு பழைய இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இருந்தது. கீழ்தளத்தில் நாளிதழ்களும், மேகஸின்களும், மேல் தளத்தில் புத்தகங்களும். எப்போதும் கீழ்தளத்தில் தூங்கி வழிந்தும், சோர்ந்த கண்களுடனும் சிலர் இருப்பார்கள். பெரும்பாலும் மத்திய வயதை கடந்தவர்கள் அல்லது வயசாளிகள். unwelcoming ambience என்பதை அந்த ஹாலின் எல்லா பக்கமும் உணரலாம். அதைத்தாண்டி மேல்தளம் சென்றால், அங்கே ஒரு அம்மணி (லைப்ரரியன்) உக்கிரமான பெண்தெய்வங்களை நினைவுறுத்துவது போல, எதற்காக வந்தாய் என்பது போல அமர்ந்திருப்பார். அவரைத்தாண்டிச் சென்றால் ஆறு புத்தக ரேக்குகள். ஒருவர் மட்டுமே சென்று வர இடைவெளி இருக்கும். கிட்டதட்ட அரை இருட்டில், காற்றே வராத அந்த இடத்தில் புத்தகங்களை தேடி எடுத்து வரும்போது வியர்வையில் நனைந்து பரிதாபமான ஒரு நிலையில் இருப்பேன். இப்போது யோசித்துப்பார்க்கும் போது அந்த அம்மணி எப்போதும் கோப நிலையில் இருந்ததின் காரணம் புரிகிறது. ஒருவர் தினமும் எட்டு மணி நேரம் அந்த இடத்தில் இருந்து வேலை செய்வது என்பது கிட்டதட்ட தன்டணையே தான்.

வேலை நிமித்தம் அமெரிக்கா வந்த பின், இதுவரை ஐந்து வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு ஊர்களில் வசித்திருக்கிறேன். அந்த ஊர்களின் நூலகங்களை நன்றாக உபயோகித்திருக்கிறேன். எந்த ஓரு நூலகத்திலும் unwelcoming ஆக உணர்ந்ததேயில்லை. மாறாக, எல்லா நூலகங்களுமே வாசகர்கள் வர வேண்டும், குடும்பமாக வர வேண்டும், குழந்தைகளோடு வர வேண்டும் என்ற ரீதியிலேயே செயல்படுகிறார்கள். குழந்தைகளுக்கான தனி section இல்லாத எந்த நூலகத்தையும் இங்கு பார்த்ததேயில்லை. குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதால் அந்த குழந்தைகளும் நல்ல manners and maturity யோடு வளர்கிறார்கள்.

சமீபத்தில் ஃப்ரிஸ்கோ நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. புதியதாக கட்டப்பட்ட இந்த நூலகம் architecture மற்றும் kid-centric approachக்காக தேசிய அளவில் பேசப்பட்டது.

Rexy, a giant 21 foot tall T-rex replica remains on the floor of Frisco Public Library on Tuesday, March 14, 2023, in Frisco.

என்னைப்போன்ற பின்புலத்திலிருந்து வரும் ஒருவனுக்கு இந்த நூலகம் அளிக்கும் ஆச்சர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. நான் சென்றது ஒரு ஞாயிறு காலை. அப்போது கூட எத்தனை எத்தனை குழந்தைகள், குடும்பங்கள் நூலகம் நோக்கி வருவதை காணும் போது மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, கூடவே ஒரு ஏக்கம் என்றாவது நம்மூரிலும் இதைப்போல் குழந்தைகளும் உபயோகிக்கும் வண்ணம் நூலகங்கள் வராதா என்று.