2018ல் இளையராஜா அமெரிக்காவுக்கு concert நடத்த வரப்போகிறார் என்று தெரிந்ததுமே கண்டிப்பாக இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று டிக்கெட் புக்கிங்கிற்காக காத்துக்கொண்டிருந்தோம். துரதிஷ்டவசமாக டாலஸ் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை! மனம் தளராமல் ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கான டிக்கெட் தேடிப்பார்த்ததில், அங்கு டிக்கெட் இருந்தது, அதுவும் 10வது வரிசையிலேயே! அன்றைய என் பணநிலைக்கு அது சற்றே பெரிய தொகை. மேலும் ஹூஸ்டன் 300 மைல் தூரம், நான்கரை மணிநேர பயண நேரம். ஆனாலும் இளையராஜவை பார்க்கப் போகிறோம் என்பதற்காக நானும் மனைவியும் அதற்கு தயாராக இருந்தோம். நிகழ்ச்சி நாளன்று பின்காலைப்பொழுதில் புளிசாதம் கட்டிக்கொண்டு டாலஸிலிருந்து ஹூஸ்டன் நோக்கி காரில் கிளம்பினோம். நான்கரை மணிநேரமும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டே. ஒரு மாபெரும் ஆளுமையை, சாதனையாளரை பார்க்கப் போகிறோம் என்பதால் நல்ல உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காக Sugarland Event Center அருகே ஒரு ஹோட்டல் புக் செய்து உடை மாற்றிக் கொண்டு சென்றோம். 6000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான உள் அரங்கம். மேடையிலிருந்து நூறடி தூரத்திலேயே எங்கள் இருக்கை அமைந்திருந்தது, இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இளையராஜா வருகைக்காக மேடையையே பார்த்துக் கொண்டிருக்கும்போது, இளையராஜா வெள்ளுடை அணிந்த ஒரு தேவதூதன் போல மேடையில் தோன்றினார். அவரைக்கண்ட அந்த க்ஷணத்தில் மொத்தக் கூட்டமும் தாமாக எழுந்து நின்று கை தட்டி அவரை வரவேற்க, ஆர்மோனியத்தில் கையை வைத்து அவர் ‘ஜனனி.. ஜனனி…’ என்று ஆரம்பிக்க, கண்களில் என்னை அறியாமல் நீர்த் துளிர்த்தது. எத்தனை முறை இந்த பாடலைக் கேட்டிருப்போம், இன்று நேரடியாக, என்பது பேர் கொண்ட பிரம்மாண்டமான ஹங்கேரி ஆர்கெஸ்ட்ராவோடு அவர் பாடக்கேட்பது எத்தனை பாக்கியம்!
ஒரு மனிதன் மூன்று மணிநேரம், ஒரு பிரம்மாண்டமான அரங்கில், மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் தன் இருப்பால், தன் இசையால் 5000 மக்களை கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்பதெல்லாம் மாயாஜாலம் அன்றி வேறென்ன?
SPB அவர்கள் இளையராஜாவை செல்லமாக ‘அவன் ஒரு இசை இராட்சசன்’ என்று ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் அன்று இளையராஜாவைப் பார்க்கும்போது அவர் சாதாரண மனிதன் போலன்றி, ஒரு அவதாரம் போன்றே தோன்றினார். அப்போது அவருக்கு 75 வயது என்று நினைவு. அந்த வயதிலும் ஒருவர் தளர்வின்றி, மூன்று மணிநேரம் நின்று கொண்டே, ஒரு பிரம்மாண்டமான ஆர்கெஸ்ட்ராவை லைவ்வாக நடத்துவது என்பதெல்லாம் சாதாரமான காரியமா? தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைக்கு (அல்லது தன்னை தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைக்கு), தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரால் தான் இத்தனை வயதிலும் இப்படி இயங்கமுடியும்.
அன்று அவரிடமிருந்து ஏதோ கண்ணுக்கு தெரியாத ஒரு காந்த சக்தி நம்மை ஊடுருவி செல்வதைப் போல் உணர்ந்தேன். சில கோவில்களில் தெய்வத்தின்முன் நிற்கும் போது உணர்வோமே, அதைப்போல.
அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கள் வீட்டில் ஒரே இளையராஜா புராணம் தான். இந்த நிகழ்ச்சி நடந்து ஏழு வருடங்கள் ஓடி விட்டன. இன்னமும் அந்த அனுபவத்தை ஒரு பொக்கிஷம் போல மனதில் சேர்த்து வைத்துள்ளேன்.