இன்று ஒரு இனிய சந்திப்பு- எங்களூர்க்காரரும், கப்பல்காரன் வலைப்பக்கத்தை நடத்தி வருபவருமான ஷாகுல் ஹமீது அவர்களை டாலஸில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

ஜெமோ தளத்தில் ஷாகுல் அவர்களின் கடிதங்களை வாசித்து இருந்த போதும், அவரை என்றாவது ஒரு நாள் நான் நேரில் சந்திக்க நேரும் என்று நினைத்திருக்கவேயில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் செந்தில், ஷாகுல் அவர்கள் டாலஸ் வருகிறார் என்று சொன்ன போது, உடனே அவரை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதை தெரிவித்தேன். நாகர்கோவில்காரர் என்பதும், கப்பலில் வேலை பார்ப்பவர் என்பதும், கல்லுரி நாட்களில் கப்பலில் சேர வேண்டும் என்று எனக்கு பெரும் கனவு இருந்ததும் அவர் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்கால தமிழில் ஷாகுல் அளவிற்கு கப்பல் வாழ்க்கையை வேறு யாரும் பதிவு செய்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவரின் கப்பல்காரனின் டைரிக் குறிப்புகள், தமிழில் ஒரு தொழில் சார்ந்த அனுபவ தொகுப்புகளில் முக்கியமான ஒன்று. விரைவில் அவர் அதை புத்தக வடிவில் வெளியிட வாழ்த்துக்கள். அவருடைய ஈராக் போர்முனை அனுபவங்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.
ஒரு சிலரிடம் பேசும்போது நம்மை அறியாமலேயே மிக அனுக்கமாக உணர்வோம். ஷாகுல் ஹமீது அவர்களும் அப்படிப்பட்டவர். முதல் முறை சந்திக்கிறோம் என்பது போல இல்லாமல் வெகு நாள் பழகிய நண்பர்களை போல மிக இயல்பாக, நட்பாக பேசினார். கப்பல் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளும் போது அவர் கண்களில் தெரியும் ஆர்வம் எதிரில் இருப்பவர்களையும் தாமாகப் பற்றிக் கொள்ளும்.
அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவரின் சொந்த ஊருக்கு வெகு அருகில் தான் என் தந்தை வழி பூர்வீகம் என்று அறிய முடிந்தது. உலகம் எத்தனைச் சிறியது! அவரும் ஜெயும் லக்ஷ்மி மணிவண்ணனும் வாக்கிங் சென்றதாக அவர் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் சுற்றித் திரிந்த இடங்கள். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், அவரும் வெளியூர் செல்லும்போது நாகர்கோவில் ராமலக்ஷ்மி ஸ்வீட் ஸ்டாலில் நேந்திரம் சிப்ஸ் வாங்கிக் கொண்டு செல்வார் என்பது. பெங்களூரில் பணிபுரிந்த நாட்களில் ஒவ்வொரு முறை விடுமுறை முடிந்து செல்லும் போதும், டீமில் எல்லோருக்கும் அந்த சிப்ஸ் வாங்கிக் கொண்டு செல்லும் அந்த நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த சிப்ஸை ருசிக்க வாய்ப்பு அளித்த ஷாஹுலுக்கும், செந்திலுக்கும் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
கப்பல் வாழ்க்கையில் சுயஒழுக்கமும், சுயக் கட்டுப்பாடும் எத்தனை முக்கியம் என அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கியது என்றும் நினைவில் இருக்கும்.
நாட்டில் இருக்கும் நாட்களில் அவர் தன்னார்வலராக செய்யும் பணிகள், பயணங்கள், அவரின் ஈராக் அனுபங்கள், அவர் சந்தித்த ஆளுமைகள் என அவரிடம் பேச, அவரிடமிருந்து தெரிந்து கொள்ள என்று எத்தனையோ விஷயங்கள். ஒரு மணி நேரம் தேநீர்ச் சந்திப்பு என்று திட்டமிட்டது, இரண்டு மணி நேரம் தாண்டி சென்றதே தெரியவில்லை!
இன்ஜினியரிங் முடித்து விட்டு எப்படியாவது கப்பலில் சேர்ந்து விடவேண்டும் என்று தட்டுத் தடுமாறிக் கொண்டு இருந்த அந்த நாட்களில் ஷாகுல் போல ஓருவர் வழி காட்டி இருந்தால், ஓருவேளை எனது வாழ்க்கைப் பயணமே வேறு பாதையில் சென்றிருக்கும்.
அவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதேதோ பழைய நினைவுகள் – மும்பை நாட்கள், கேட் வே ஆஃப் இந்தியாவில் அமர்ந்து, தூரத்தில் அரபிக்கடலில் தெரியும் கப்பல்களை ஏக்கத்துடனும், என்றாவது ஒரு நாள் அக்கப்பல்களில் தானும் பணி செய்வோம் என கண்களில் கனவுகளுடனும் பார்த்துக் கொண்டு இருந்த அந்த இளைஞனை மீண்டும் நினைவுகளின் இருட்டறைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது போல இருந்தது.
பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர் செந்தில் சொன்னது போல, நாம் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு இருக்கம் போது, வாழக்கை வேறு எதையோ கொடுக்கிறது. அந்த நேரத்தில் அதன் அர்த்தம் புரியாமல் நாம் தடுமாறலாம், ஆனால் பின்னோக்கிப் பார்க்கும் போது, எல்லாம் ஏதோ காரணகாரியமாகவே நடக்கிறது என்று புரிந்து கொள்வோம். ” You can only connect the dots backwards” என்பது மனதில் மின்னி்ச் சென்றது.
கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு, இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த சிறு நகரத்து இளைஞனுக்கு கப்பல் வேலையை விட கம்பியூட்டர் வேலையே சரியானது என்று இறையே அன்று வழி மாற்றியதாகவே தோன்றுகிறது.
என்னுடைய மிக குறிய கப்பல் அனுபவங்களைப் பற்றி தனியே ஒரு பதிவு இட வேண்டும்.